சென்னை : தேமுதிக தலைவர் விஜயகாந்த் தன்னுடைய கட்சி அலுவலகத்தில் வொயிட் அண்ட் வொயிட் ஆடையில் மகிழ்ச்சியோடு செல்ஃபி எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அரசியலில் தனி பாணியை வகுத்தக் கொண்டு செயல்பட்டு வருபவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். 2016 சட்டமன்றத் தேர்தலில் கடுமையான தோல்வியை சந்தித்த நிலையில் விஜயகாந்த்தின் அரசியல் எடுபடவில்லை என்று பலரும் விமர்சித்தனர். இதனிடையே அவருடைய உடல்நிலையும் கடுமையாக பாதிக்கப்பட்டதால் அவர் அரசியலில் இருந்து சற்று ஒதுங்கியே இருந்தார்.

இந்நிலையில் மே மாதம் திருப்பூரில் நடந்த உழைப்பாளர் தின பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தொண்டர்களுக்கு குஷி தந்தார். அதன் பிறகு தன்னுடைய உடல்நலன் குறித்து கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்தார். தொடர்ந்து அரசின் செயல்பாடுகளை கண்டித்து அறிக்கைகள் என தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.

அரியலூரில் மாணவி அனிதா உயிரிழந்ததற்கு காரணமான நீட் தேர்விற்கு கண்டனம் தெரிவித்தார். இதோடு நின்று விடாமல் யாரும் எதிர்பாராத விதமாக இறுதிச் சடங்கில் பங்கேற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

அண்மையில் தனது பிறந்தநாளையும், கட்சியின் 13வது ஆண்டு நிறைவு விழாவையும் கொண்டாடிய விஜயகாந்த், இனி வரும் காலங்களில் தொலைநோக்கு பார்வையில் செயல்படப் போவதாகக் கூறியிருந்தார். மேலும் தமிழக மக்கள் இனி தன்னுடைய வேகத்தையும், துடிப்பையும் பார்க்கத்தான் போகிறார்கள் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் உடல்நலன் தேறிய பின்னர் பொலிவுடன் காணப்படுகிறார் விஜயகாந்த். அவர் உற்சாகத்துடன் செல்பி எடுத்துக் கொள்ளும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கட்சி அலுவலகத்தில் வெள்ளை நிற பேண்ட், சட்டை, ஷூ அணிந்து கொண்டு கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு சிரித்த முகத்தடன் செல்ஃபி எடுக்கிறார் விஜயகாந்த். பழைய பன்னீர்செல்வமாக காட்சியளிக்கும் விஜயகாந்த்தின் இந்த புகைப்படங்கள் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here