விஷால் எப்போதெல்லாம் தன் திரைப்பயணத்தில் கொஞ்சம் சறுக்கலில் இருக்கின்றாரோ அப்போதெல்லாம் புதிய முயற்சிகளை கையில் எடுப்பார். யாரும் எதிர்ப்பாராத கூட்டணியை அமைத்து ஹிட் கொடுப்பார். அப்படித்தான் அவன் இவன், பாண்டியநாடு படங்கள் அமைந்தது, அதேபோல் தற்போது யாரும் எதிர்ப்பாராத விதமாக மிஷ்கினுடன் கூட்டணி அமைத்து துப்பறிவாளன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளிவர, துப்பறிவாளன் மூலம் விஷால் மீண்டும் வெற்றிக்கொடி நாட்டினாரா? பார்ப்போம்.

கதைக்களம்

விஷால் ஒரு தனியார் துப்பறிவாளர். போலிஸே முடிக்க முடியாத வழக்குகளை விஷால் மிக எளிதாக முடிக்கின்றார். அப்படியிருக்கு ஒரு கஷ்டமான வழக்கை தேடி அலைகின்றார்.

அந்த நேரத்தில் ஒரு பள்ளி மாணவன் எங்கள் வீட்டு நாய் இறந்துவிட்டது, அது உடலில் இந்த குண்டு இருந்தது என கொடுக்க, அந்த வழக்கை விஷால் கையில் எடுக்கின்றார்.

அதே சமயத்தில் சிம்ரனின் கணவர் மின்னல் தாக்கி இறக்கின்றார். ஆனால், அந்த மின்னல் இயற்கையாக வந்தது இல்லை என விஷால் ஒரு கட்டத்தில் கண்டுப்பிடிக்கின்றார்.

இந்த நாய் மரணத்தில் தொடங்கிய வழக்கு, மின்னல் தாக்கி இறந்தவர், இதை யார் செய்தார்கள், எதற்காக செய்தார்கள் என்பதன் முடிச்சுகள் ஒவ்வொன்றையும் நிதானமாகவும் சுவாரசியமாகவும் மிஷ்கின் அடுத்தடுத்து அவிழ்க்கின்றார்.

விஷால் கணியன் பூங்குன்றனாக வாழ்ந்தே உள்ளார், உடல் தான் விஷால், உயிர் கொடுத்தது மிஷ்கின் தான். நடை, உடை, பெண்களிடம் பேசுவது என அனைத்திலும் மிஷ்கின் மட்டும் கண்ணில் தென்படுகின்றார். சவாலான வழக்கை தேடி அலைந்து பிறகு அந்த வழக்கு அவர் கழுத்தையே இறுக்க அதிலிருந்து அவர் வெளியேற செய்யும் வேலைகள் என ‘அட துப்பறிவாளர்கள் உண்மையாகவே இப்படித்தான் இருப்பார்களா’ என்று கேட்க வைக்கின்றது.

பிக்பாக்கெட்டாக வரும் அனு இமானுவெல், விஷால் மேற்பார்வையில் இருந்து அவர் வீட்டிலே வேலை செய்து, கிளைமேக்ஸில் வினயிடம் போனை திருடி விஷாலிடம் கொடுக்கும் காட்சியில் மனதை நெகிழ வைக்கின்றார்.

ஹாலிவுட் படமாக ஷெர்லாக் ஹோம்ஸில் எப்படி துப்பறிவாளருக்கு உதவியாளராக ஒருவர் வருவாரோ அதேபோல் தான் பிரசன்னா. விஷாலுக்கு உதவியாக வந்து கிளைமேக்ஸில் அவர் கொடுக்கும் துப்புக்களை கண்டுப்பிடித்து உதவும் காட்சியில் பிரசன்னா செம்ம.

மிஷ்கின் படம் என்றாலே கொஞ்சம் ஸ்லோவாக இருக்கும் என்பார்கள், அது ஸ்லோ இல்லை, நிதானம், இந்த கதைக்கு இப்படிப்பட்ட ஒரு நிதானமான திரைக்கதை அவசியம் தான், கதாபாத்திரங்களை அவர் வடிவமைக்கவில்லை, உருவாக்கியேவிட்டார்.

அதிலும் பாக்யராஜ் என்று பத்து பேர் சொன்னால் தான் தெரியும், அப்படி ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் கலக்கியுள்ளார். நீண்ட வருடங்களாக ஒரு ப்ரேக்கிற்காக காத்திருந்த வினய்க்கு இனி வில்லன் வேஷம் குவியலாம். அவர் ஸ்கிரீனில் வந்து காபி கேட்டால் நம்மை பயம் தொற்றிக்கொள்கின்றது.

ஆண்ட்ரியாவும் வழக்கம் போல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படத்தின் மிகப்பெரும் பலமே சண்டைக்காட்சிகளும், இசையும் தான், சண்டைக்காட்சியை வடிவமைத்தவருக்கு கண்டிப்பாக அடுத்த வருடம் பல விருது காத்திருக்கின்றது.

அரோலின் பின்னணி இசை படத்துடன் நம்மையும் கதைக்குள் இழுத்து செல்ல மிகவும் பயன்பட்டுள்ளது.

நடிகர், நடிகைகள் பங்களிப்பு, குறிப்பாக வினய், பாக்யராஜ், ஆண்ட்ரியா ஆகியோர் சிறப்பாக தங்கள் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

படத்தின் பல காட்சிகள் மிகவும் உணர்வுப்பூர்வமாக உள்ளது. பாக்யராஜ் மரண படுக்கையில் செய்யும் விஷயம், அனு இமானுவெல் விஷாலை விட்டு பிரியும் தருணம் மிகவும் நெகிழ்ச்சிகரமாக உள்ளது.ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை சிறப்பாக உள்ளது.

முடிவில் கணியன் பூங்குன்றன் வழக்கை வெற்றிகரமாகவும், நெகிழ்ச்சிகரமாகவும் முடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here