கொழும்பு : கண்டியில் புது மண தம்பதி கின்னஸ் சாதனையில் இடம்பெறுவதற்காக மணப்பெண் மிக நீள புடவை அணிந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி மாணவர்களை பயன்படத்தியதால் சர்ச்சை எழுந்துள்ளது. கண்டியின் கன்னோரு பிரதேசத்தில் கின்னஸ் சாதனைக்காக கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற திருமணம் சர்ச்சையை ஏற்படத்தியுள்ளது. இந்த திருமணத்தில் மணப்பெண் சுமார் 3 ஆயிரத்து 200 அடி நீள ஒசரி புடவையை அணிந்திருந்துள்ளார். மணமக்கள் கண்டி முதல் கொழும்பு வரையிலான வீதியில் ஊர்வலமாக சென்றுள்ளனர். இந்த ஊர்வலத்தின் போது மத்திய மாகாண முதல்வர் சரத் ஏக்கநாயக்காவின் அலவத்துகொடி ஆரம்ப பாடசாலையின் மாணவர்களும் பங்கேற்றுள்ளனர்.


மணமக்கள் சாலையில் நடந்து சென்ற போது, மணமகளின் மிக நீள சேலை தரையில் படாமல் இருக்க பள்ளி மாணவர்கள் அதனை ஏந்தி நின்றுள்ளனர். கடுமையான வெயிலில் இந்தப் பள்ளிக் குழந்தைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதே போன்று சுமார் 100 பள்ளி மாணவர்கள் மணமக்கள் ஊர்வலத்தின்போது பூங்கொத்துகளை கையில் ஏந்தி நடந்து சென்றுள்ளனர். இரண்டு மைல் தூரம் நடந்த மணமக்களின் ஊர்வலம் கின்னஸ் சாதனைக்காக செய்யப்பட்ட நிலையில் கடுமையான வெயிலில் பள்ளி மாணவர்களை பயன்படுத்தியதால் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மையம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

பள்ளி மாணவர்களை பயன்படுத்தி இது போன்ற செயல்களில் ஈடுபடுவது ட்ரெண்ட் ஆகிவிடக் கூடாது என்பதால் இந்த திருமண ஊர்வலம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவர் மரினி டீ லிவெரா தெரிவித்துள்ளார். பள்ளி நேரத்தில் மாணவர்களை இது போன்று நிகழ்ச்சிக்காக பயன்படுத்தியது சட்டவிரோதமானது என்றும் விதிகளை மீறி செயல்பட்டவர்களுக்கு பத்து ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மாணவர்களின் கல்வியை பற்றி கவலையின்றி, அவர்கள் பாதுகாப்பையும் கருத்தில் கொள்ளாமல் இந்த செயல் அரங்கேற்றப்பட்டுள்ளது. மாணவர்களின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் செயல்பட்டது கிரிமினல் குற்றம் செய்ததற்கு ஒப்பானது என்றும் மரினி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here