அன்புள்ள கமல் அவர்களுக்கு வணக்கம்.
நீங்கள் அரசியலில் குதிப்பீர்களா மாட்டீர்களா என்று ஒரு பெட்டிங்கே நடந்துகொண்டிருக்கும் நேரம் இது. நான் நீண்ட நாட்களாகவே அரசியலில் இருந்துகொண்டுதான் இருக்கிறேன் என்று நீங்கள் மீண்டும்மீண்டும் சொல்லுகிறீர்கள். அதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். சமூக நிகழ்வுகள் பற்றி பொது வெளியில் கருத்து சொல்லும் எவரும் அரசியலில் இருக்கிறார்கள் என்பதே நிஜம். அப்படி கருத்து சொல்பவராக நீங்கள் தொடர்ந்து இருந்து வருகிறீர்கள். அப்படியானால் ஏன் இதைப் பற்றி கருத்து சொல்லவில்லை, அதைப் பற்றி கருத்து சொல்ல வில்லை என்று சிலர் கேட்பது அசட்டுத்தனம்தான். கருத்து சொல்லாமல் இருப்பதும் அரசியல்தான் என்பது புரியாதவர்கள் அவர்கள்.
எல்லாருக்கும் இருக்கும் கேள்வி நீங்கள் கட்சி அரசியல், தேர்தல் அரசியலுக்குள் வரப் போகிறீர்களா இல்லையா என்பதுதான். இந்தக் கேள்வி எழுவதற்கான அடிப்படைக் காரணம் இப்போது அரசியலில் ஏற்பட்டிருக்கும் வெற்றிடம். ஜெயலலிதா காலமாகிவிட்டார். கலைஞர் கருணாநிதியை முதுமை நோய் செயலிழக்கவைத்துவிட்டது. இவர்களுடைய இரு கழகங்களுக்கும் மாற்று தேவை என்ற தேடல் எண்பதுகளிலிருந்தே இருப்பதுதான். 1969லிருந்து 1975க்குள்ளேயே தி.மு.க எவ்வளவு அராஜகமும், ஊழலும் நிரம்பிய கட்சி என்பது அம்பலமாகிவிட்டது. 1977லிருந்து 1980க்குள்ளேயே எம்.ஜி.ஆரின் அ.இ.அ.தி.மு.க எப்படி அதே குட்டையில் ஊறிய மட்டைதான் என்பதும் வெட்டவெளிச்சமாகிவிட்டது. அதனால்தான் எண்பதுகளிலேயே நெடுமாறன் போன்றவர்கள் மூன்றாவது அணியை உருவாக்க முட்டி மோதினார்கள். முடியவில்லை.
திரும்பத் திரும்ப மாற்றை மக்கள் வரவேற்க தயாராக இருந்தபோதும், அதை சரியாக வழங்கக்கூடிய தலைமையும் அமைப்பும் உருவாகவே இல்லை. வைகோவின் ம,தி.மு.க, ராமதாசின் பா.ம.க, விஜய்காந்த்தின் தே.மு.தி.க, இடதுசாரிகளின் மக்கள் நலக் கூட்டணி என்று ஒவ்வொரு பத்தாண்டிலும் ஒரு மின்னல் கீற்று போல ஏதேனும் முயற்சி நடக்கும்போது மக்கள் ஆரம்பத்தில் எதிர்பார்ப்புகளுடன் ஆதரிக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் தி.மு.க, அ.இ.அ.தி.மு.க இரண்டிற்கும் இருக்கும் பண பலம், அமைப்பு பலம் இரண்டுக்கும் ஈடு கொடுக்க முடியாமல் எல்லா முயற்சிகளும் அடிபடுகின்றன. தங்கள் ஊழலை மறைக்க இரு கட்சிகளும் வெற்றிகரமாக நலத் திட்டம் என்ற கேடயத்தை பயன்படுத்தி வந்திருக்கின்றன.
இந்த வரலாற்றுத் தொடர்ச்சியில்தான் இப்போதைய எதிர்பார்ப்புகளும் இருக்கின்றன. ஜெயலலிதா, கலைஞர் போன்ற பலமான தலைமைகள் இல்லாமல் அ.தி.மு.கவும் தி.மு.கவும் சற்றே தளர்ந்துள்ள சூழலில் மாற்று அரசியல் இப்போதேனும் துளிர்க்காதா என்ற எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது.
அதற்கு வடிவமும் உயிர்ப்பும் கொடுக்க உங்களால் முடியுமா என்று ஆராய்வோம்.
உங்கள் முன்னால் இரண்டு வழிகள்தான் இருக்கின்றன. ஒன்று நற்பணி இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றி தனிக் கட்சியைத் தொடங்குவது. 2019 மக்களவை தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல் இரண்டிலும் மோதிப் பார்க்க ஆயத்தம் செய்வது. தமிழ் அடையாளத்துடன் அல்லது திராவிட அடையாளத்துடன் உடைய ஊழலற்ற ஆட்சியே லட்சியம் என்ற கோஷத்துடன் நீங்கள் மக்களிடம் செல்ல வாய்ப்பு இருக்கிறது. அதுதான் உங்களை பாரதிய ஜனதாவிடமிருந்து வேறுபடுத்திக் காட்டக் கூடியது. (அதற்கு நீங்கள் நிறைய ஹோம் ஒர்க் செய்யவேண்டும். டெங்கு தெரிந்தால் போதாது. நீட்டும் நெடுவாசலும் இட ஒதுக்கீடும் புரியவேண்டும்.)
இந்த நோக்கத்தை முன்வைத்து அரசியல் செய்வதென்றால் நீங்கள் தி.மு.க, அ.தி.முக, காங்கிரஸ், பீ.ஜே.பி ஆகிய நான்கு கட்சிகளுடனும் எப்போதும் சேராமல் தனிப்பாதையில் நடை போட்டாக வேண்டும். அப்படி செய்யத் தவறியதால்தான் வைகோ, விஜய்காந்த், பா.ம.க எல்லாருமே பலவீனமடைந்தார்கள். தலித், இடதுசாரி இயக்கங்களைத் தவிர வேறு யாருடனும் நீங்கள் கூட்டு சேர வாய்ப்பில்லை.
இன்று தொடங்கி அடுத்த தேர்தல் வரை உங்கள் கட்சி தாக்கு பிடிக்க வேண்டுமென்றால் அதற்கு பண பலமும், அமைப்பு பலமும் அவசியம். விஜய்காந்த் நிறைய சொத்துகளை விற்றுத்தான் கட்சி நடத்தினார். அதே சமயம் ஒவ்வொரு வார்டிலும் பூத் கமிட்டி அமைத்து கட்சியை சரியான மனிதர்களைக் கொண்டு கட்டத் தவறினார். டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஒரே ஆண்டில் ஆட்சியைப் பிடிக்க உதவியது வார்டு ரீதியாக உருவாக்கிய அமைப்பு பலம்தான். அப்படி ஒன்றை தமிழகத்தில் உங்களால் உருவாக்க முடியுமா என்பதை நீங்கள் யோசிக்க வேண்டும். கட்சி நடத்துவது படப்பிடிப்பு நடத்துவது போல் அல்ல. தப்பு செய்யும் துணை இயக்குநரை அடுத்த நிமிடமே துரத்திவிடலாம். தொண்டனை அப்படி கையாள முடியாது.
கட்சி அரசியலுக்குள் இறங்குவதற்கு முன்னரே உங்கள் மீதான ஒழுக்க விமர்சனங்கள் வரத் தொடங்கிவிட்டன. இதைப் பற்றி கவலைப் பட ஏதுமில்லை. தமிழகத்தில் காமராஜர், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்று எந்தத் தலைவரின் தனி வாழ்க்கை ஒழுக்கம் பற்றியும் மக்கள் அலட்டிக் கொண்டதே இல்லை. பொது வாழ்க்கை நடத்தை அதில் தங்களுக்கு கிடைக்கும் பயன் என்பது பற்றி மட்டுமே எப்போதும் வாக்காளர்கள் யோசித்திருக்கிறார்கள்.
ஒரு முழு நேர அரசியல் அமைப்பை உருவாக்கி நடத்த, நீங்கள் முழு நேர அரசியல்வாதி ஆக வேண்டும். விஸ்வரூபம்2, சபாஷ் நாயுடு இரு படங்களுடன் உங்கள் திரை வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டி வரும். அல்லது ஆட்சியைப் பிடிக்கும் வரை எம்.ஜி.ஆரைப் போல திரை வாழ்க்கையைத் தொடரலாம். ஆனால் அப்போது உங்கள் ஒவ்வொரு படமும் நாடோடி மன்னனாக இருந்தால்தான் அது உங்கள் அரசியலுக்கு உதவும்.
இத்தனை வருட காலமாக நீங்கள் சினிமாவில் காட்டி வந்திருக்கிற ஈடுபாடு கொஞ்ச நஞ்சமல்ல. தமிழ் சினிமாவின் வரலாற்றில் பாகவதர் முதல் சிவ கார்த்திகேயன் வரை வந்திருக்கும் கதாநாயகர்களிலேயே முழுமையான சினிமாஜீவி நீங்கள் ஒருவர்தான். அந்த ஈடுபாட்டை தியாகம் செய்யாமல் அரசியலில் ஈடுபட முடியாது. மாற்று அரசியலில் காட்டவேண்டிய உழைப்பையும் ஈடுபாட்டையும் மாற்று சினிமாவுக்குக் காட்டினால் சினிமாவில் உங்கள் பங்களிப்பு இன்னொரு தளத்தை எட்டும் வாய்ப்பு உண்டு. அரசியலில் தொலை நோக்கு விளைவுகள் கிடைக்க முடியும். முழு உழைப்பை நல்கியும் உடனடி விளைவுகள் கிட்டாத விரக்தியும் வரக் கூடும். இதற்கெல்லாம் நீங்கள் தயாரா என்ற கேள்விக்கான பதிலில்தான் முதல் வழியை தேர்வு செய்வீர்களா மாட்டீர்களா என்ற பதிலும் இருக்கிறது.
அரசியலில் ஈடுபட இரண்டாவது வழி ஒன்றும் இருக்கிறது. தேர்தல் அரசியலில் ஈடுபடுவதை முற்றாக நிராகரித்துவிட்டு நீங்கள் அரசியல் செய்யலாம். சுற்றுச் சூழல் இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள் எல்லாம் அப்படிப்பட்ட பிரஷர் குரூப் அரசியலில்தான் ஈடுபட்டு வருகின்றன. பிரசினைகளை அடையாளப்ப்படுத்துவது, அவற்றுக்காக குரல் எழுப்புவது, ஆட்சி நிர்வாக யந்திரத்தை அவை நோக்கி செயல்பட வைப்பது , அதற்குப் போதுமான மக்கள் செல்வாக்கைத் திரட்டுவது என்பவை மட்டுமே அழுத்த அரசியலின் அம்சங்கள். இதை உங்களால் எளிதில் செய்ய முடியும். எந்தக் கட்சியையும் எதிர்க்கவும் தேவையில்லை. ஆதரிக்கவும் தேவையில்லை. ஒவ்வொரு பிரச்சினையிலும் பிரச்சினையின் அடிப்படையில் நிலைப்பாடு எடுத்து அதை ஊருக்கு உரக்கச் சொல்வது என்ற பப்ளிக் இண்டெலக்சுவல் இயக்கத்தை நீங்கள் வடிவமைத்து நடத்தலாம். உங்களுக்கு இருக்கும் பிரபலம் பல பிரச்சினைகளுக்கு கவனம் கிடைக்க உதவும். தமிழ்நாட்டில் மலமும் கழிவும் அள்ளும் தொழிலில் ஒரு மனிதரும் இருக்கலாகாது என்ற ஒற்றை கோரிக்கையுடன் நீங்கள் இயக்கம் நடத்தினால் அது எத்தனை வீரியத்துடன் செயல்படும் என்று கற்பனை செய்யுங்கள்.
இதைச் செய்ய உங்கள் திரை வாழ்க்கையை தியாகம் செய்யத் தேவையும் இல்லை.இரண்டில் எந்த வழியைத் தேர்வு செய்வதானாலும் சரி. அதற்கு அவசியம் இருக்கிறது. களத்தில் எது சாத்தியம் என்பதை விட, உங்களுக்கு எது சாத்தியம் என்பதை தீர்மானியுங்கள். விரைந்து தீர்மானியுங்கள். உங்களை எதிர்பார்த்து காத்திருக்கும் எண்ணற்ற ரசிகர்களை சோர்வடைய செய்யாதீர்கள்.
அன்புடன்
ஞாநி
பின்குறிப்பு: இந்தக் கடிதத்தை நீங்கள் உங்கள் நண்பர் ரஜினியுடன் பகிர்ந்துகொள்ளலாம். அவருக்கும் பயன்படக் கூடும்.
Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here