ஜெனிஃபல் லோபஸ் முதல் லெப்ரான் ஜேம்ஸ் வரை பிரபலங்களுக்கு உலகம் முழுக்க கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு. இந்த பிரபலங்களே ஒருவர் குத்துச்சண்டைக் களத்தில் இறங்கினார் என்றால், மைதானத்தில் ஆஜராகி விடுவார்கள். உல்லாசத்துக்கும் சூதாட்டத்துக்கும் பெயர் போன நகரம் லாஸ்வேகாஸ். தொழில்முறைக் குத்துச்சண்டைப் போட்டி இங்கு வெகுபிரபலம். அமெரிக்காவைப் பொறுத்தவரை, கோடிக்கணக்கான டாலர்கள் புழங்கும் ஒரு தொழில். முகமது அலி, மைக் டைசன் தொழில்முறைக் குத்துச்சண்டைப் போட்டிகளில் வெகு பிரபலம். அவர்கள் அளவுக்கு உலகமெங்கும் மேவெதர் பிரபலமடையவில்லை.

 

 

எனினும், முகமது அலி, மைக்டைசன் படைக்காத சாதனையை மேவெதர் நேற்று நிகழ்த்தினார். முகமது அலி 61 போட்டிகளில் களமிறங்கி 56 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதோடு, 5 போட்டிகளில் தோல்வி கண்டிருக்கிறார். மைக் டைசன் கூட 6  போட்டிகளில் தோல்வியைச் சந்தித்திருக்கிறார். ஆனால், மேவெதர் தான் பங்கேற்ற 50 போட்டிகளிலும் வெற்றி பெற்று அசாத்தியச் சாதனை படைத்தார் என்றால் சாதாரண விஷயமா?

லாஸ்வேகாஸில் குத்துச்சண்டைப் போட்டி நடந்தால் குறைந்தது ரூ.3 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் நடைபெறும். டிக்கெட் கட்டணம், சர்வதேச மற்றும் அமெரிக்க டி.வி. ஒளிபரப்பு உரிமம், ஸ்பான்சர்ஷிப், சூதாட்டக் கிளப், அமெரிக்க தியேட்டர்களில் ஒளிபரப்பு, பந்தயம் தொடர்பான பொருள்கள் விற்பனை எல்லாம் இதில் அடங்கும். அதிலும் நட்சத்திர வீரர்கள் களமிறங்கினால் வர்த்தகம் இரு மடங்காகும்.

மேவெதர் – மெக்ரிகோர் ஆகியோருக்கு இடையே நேற்று நடந்த போட்டியின் மொத்த வர்த்தகம் 4 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். தொழில்முறைக் குத்துச்சண்டைப் போட்டிகளைப் பொறுத்தவரை, தற்போது மேவெதர்தான் முக்கிய அட்ராக்ஷன். கால்பந்து விளையாட்டில் அதிக பணப்புழக்கம் இருக்கும். அண்மையில்,  பார்சிலோனாவில் இருந்து நெய்மரை 5 ஆண்டுகளுக்கு பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் அணி ரூ. 1,750 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. நெய்மர் 5 ஆண்டுகள் விளையாடி சம்பாதிப்பதை மேவெதர் ஒரு மணி நேரத்தில் சம்பாதித்து விடுகிறார்.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த மேவெதர், குத்துச்சண்டையில் சம்பாதித்தது பல்லாயிரம் கோடி. படுக்கையில் பணக்கட்டுகளைக் கட்டுக்கட்டாக அடுக்கி வைத்து, அதன் மேல் படுத்து உறங்குவதை வழக்கமாகக் கொண்டவர். ஒரு விமானம் மற்றும் 8 விலை உயர்ந்த கார்களும் மேவெதருக்கு உள்ளது.  கடைசியாக 2015-ம் ஆண்டு ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னணி வீரர் மானிபோக்கியோவுடன் மேவெதர் மோதினார். இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்றப் போட்டியாக அது கருதப்பட்டது. 38 வயது மேவெதருக்கு மானிபோக்கியோ சவால் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இழுபறியாக இருந்தாலும் மேவெதர் வெற்றி பெற்று ரூ. 1,200 கோடி பரிசை வென்றார். இது மேவெதரின் 49-வது போட்டி ஆகும். மானிபோக்கியோவை வீழ்த்தியதும், மேவெதர் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

 

ஆனால், மேவெதரை எப்போதும் யாராவது வம்பிழுத்துக்கொண்டுதான் இருப்பார்கள். இந்த முறை வம்பிழுத்தவர் அயர்லாந்தைச் சேர்ந்த கனோர் மெக்ரிகோர். லாஸ்வேகாஸ் நகரில் உள்ள டி – மொபைல்அரீனாவில் இந்திய நேரப்படி நேற்று காலை இருவரும் ரிங்குக்குள் இறங்கினர். ஒவ்வொரு ரவுண்டும் 3 நிமிடங்கள் என 12 சுற்றுகள் கொண்ட போட்டி இது. குத்துச்சண்டை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்த நிலையில், தொடக்கத்தில் என்னவோ மெக்கிரிகோரின் கையே ஓங்கியிருந்தது.

மேவெதர் தற்காப்பு ஆட்டத்தையே ஆடினார். முதல் ஐந்து சுற்றுகளில் மெக்ரிகோர் 51- 40 என்ற புள்ளிக்கணக்கில் ஆதிக்கம் செலுத்தினார். ஆனால், நான்காவது சுற்றில் இருந்து, தடுப்பாட்டத்தைப் படிப்படியாகக் குறைத்த மேவெதர், மெக்ரிகோரை நோக்கி சராமரியாக குத்துக்களை இறக்கத் தொடங்கினார். 40 வயது மெவெதரின் முன், 29 வயது மெக்டிரிகோரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. வேகமும் படிப்படியாக குறைந்தது. 7-வது ரவுண்டில் மெக்ரிகோர் மிகுந்த சோர்வடைந்தார்.

இந்தச் சுற்றில் மேவெதர் விட்ட குத்தால் மெக்ரிகோரின் மூக்கும் உடைந்தது. 10-வது சுற்றில் மேவேதர் விட்ட ‘பஞ்ச்’ மெக்ரிகோரின் முகத்தைத் தாக்க, ரிங்கில் அப்படியே சரிந்தார். தலை தொங்கிக் கிடந்தது. நடுவர் போட்டி முடிந்ததாக அறிவித்தார். இப்போது, மேவெதர் 130 புள்ளிகள் பெற்றிருந்தார். மெக்ரிகோர் 60 புள்ளிகளுடன் முடிந்து போனார்.

தொழில்முறைக் குத்துச்சண்டையில் இதற்கு முன், அமெரிக்க வீரர் ராக்கி மார்சியானா 49 போட்டிகளில் வெற்றிபெற்று சாதனைப் படைத்திருந்தார். அதை மேவெதர் முறியடித்தார். வெற்றி பெற்ற மேவெதருக்கு ரூ. 1,300 கோடி பரிசு வழங்கப்பட்டுள்ளது. மெக்ரிகோருக்கு 600 கோடி கிடைத்துள்ளது. இந்த, 50 போட்டிகளில் மேவெதர் 27 போட்டிகளில் நாக்அவுட் முறையில் வெற்றிகண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here