சமைத்த உணவு சுவையாக இருக்கவேண்டும் என்றால், வாங்கும் காய்கறிகள் நல்லதாக இருக்கவேண்டும். சிலருக்கு காய்கறிகளை எப்படிப் பார்த்து வாங்க வேண்டும் என்பது பிடிபடுவதில்லை. ஒவ்வொரு காய்கறியையும் எப்படி தரம் பார்த்து வாங்கவேண்டும். அப்படி, நீங்கள் வாங்கும் காய்கறிகளில் அவசியம் கவனிக்க வேண்டியவை இதோ.

உருளைக்கிழங்கு:

தழும்புகள், ஓட்டைகள் இல்லாமல் இருக்க வேண்டும். பச்சையாகவோ அல்லது பச்சை நிறத்தழும்புகள் இருந்தாலோ தவிர்க்கவும். தோல் சுருங்கியவற்றையும் வாங்கக்கூடாது. விரல் நகத்தினால் கீறினால் தோல் வரவேண்டும். இதுதான் நல்ல உருளைக்கிழங்குக்கு அடையாளம். சுவையாகவும் இருக்கும்.

முருங்கைக்காய்:

கரும்பச்சை நிறத்திலும் சற்று உருண்டையாகவும் இருக்கும் முருங்கைக்காயாகப் பார்த்து வாங்க வேண்டும். பட்டையாக இருந்தால் உள்ளே சதை இருக்காது என்பதால் தவிர்க்கவும். இரு முனைகளைப் பிடித்து லேசாக முறுக்கினால் வளைத்துகொடுக்கவேண்டும். அதுவே இளசான காய். அதுவே முறுக்கும்போது மளமளவென்று சத்தம் கேட்டால், அது முற்றல். தவிர்க்கவும்.

முள்ளங்கி:

காய் நீண்டு, தலைப்பகுதி காம்பு நிறம் மாறி வாடிவிடாமல் பச்சையாக இருக்க வேண்டும். நகத்தால் லேசாகக் கீறிப் பார்க்கும்போது தோல் மென்மையாக இருந்தால் அது இளசு, சமைக்க உகந்தது.

பீன்ஸ்:

ஃப்ரெஷ் பீன்ஸ் நல்ல பச்சை நிறத்தில் இருக்கும். உடைத்தால் பட்டென்று உடையும். அதுதான் சமையலுக்குச் சுவையாக இருக்கும். வெளிர்பச்சை நிறத்தில் இருந்தால் அது முற்றிய பீன்ஸ். நாள்பட்ட பீன்ஸும் வதங்கி வெளிர்பச்சையாகக் காட்சியளிக்கும்; தவிர்க்கவும்.

வாழைக்காய்:

காம்பு ஒடிந்த இடத்தில் வெள்ளையாக இருக்கிறதா என்று பார்த்து வாங்குவது நல்லது. வாங்கி வந்தபிறகு சுத்தமாகக் கழுவிவிட்டு தண்ணீரில் போட்டு வைத்தால், வாடாமலும் பழுக்காமலும் இருக்கும்.

வெண்டைக்காய்:

பச்சை நிறத்தில் இருக்கவேண்டும். நுனியை உடைத்தால் படக்கென்று உடையவேண்டும், அதுதான் பிஞ்சு. உடையாமல் வளைந்தாலோ, இரண்டாகப் பிளந்தாலோ அல்லது காம்பு சுருங்கியிருந்தாலோ அது முற்றல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here