தினமும் இரவு தூங்கப்போகும் முன் பால் குடிப்பது ஒரு நல்ல விஷயம் என்பது பலரின் கருது.அதிகப்படியாக உடல் எடையை கூட்டவோ அல்லது உடலில் சக்தியை கூட்டவோ பால் முக்கியபங்கு வகிக்கிறது.புத்தகங்கள், டிவி என எதைப் பார்த்தாலும் டயட், இதை சாப்பிடாதே அதை சாப்பிடாதே என்று போட்டு குழப்பிவிடுகிறார்கள். கடைசியில் நாம் என்ன தான் சாப்பிடுவது?இதில் பால் சாப்பிடுவது உடலுக்குக் கேடு என்றொரு வதந்தி வேறு.காலை எழுந்த உடன் குடிக்கிற காபி, டீயில் தொடங்கி, இரவு உணவு வரை உள்ளே இறங்கும் ஒவ்வொரு கவள உணவைப் பற்றியும் நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஆயிரம் கேள்விகள்.

பால் மிகச்சிறந்த ஒரு சத்துணவு. புரதம், கால்சியம், வைட்டமின் பி (குறிப்பாக ரிபோஃபிளேவின்), வைட்டமின் டி என எல்லாச் சத்துகளும் பாலில் உள்ளன. இரும்புச்சத்தும், வைட்டமின் சி சத்தும் மட்டும் கொஞ்சம் குறைவு. பிறந்த குழந்தை முதல் வயதானவர் வரை எல்லோருக்கும் பால் அவசியம். குழந்தைகளுக்கு அடிப்படை உணவான பால், வயதானவர்களுக்கு சப்ளிமென்ட் உணவு.
தாய்ப்பால், பசும்பால், எருமைப்பால், கொழுப்பு நீக்கிய ஸ்கிம்டு மில்க் என பாலை 4 வகைகளாகப் பிரிக்கலாம். தாய்ப்பாலில் ‘கேசின்’எனப்படுகிற புரதச்சத்து குறைவு. அது பசும்பாலில் அதிகம். எருமைப்பாலில் கொழுப்புச்சத்து அதிகம்.

‘பெண்கள் பால் குடிக்கக் கூடாது, பால் குடித்தால் உடல் பருக்கும், ஹார்ட் அட்டாக் வரும்’ என்றெல்லாம் ஆளாளுக்கு ஆயிரம் சொல்வதைக் கேட்கிறோம். பாதகமில்லாத உணவு பால். பிரச்னை பாலில் அல்ல. அதிலுள்ள கொழுப்பில்தான். கொழுப்பு நீக்கிய பால் எல்லோருக்கும் உகந்தது. இதய நோய் உள்ளவர்களும் பால் குடிக்கலாம்.பாலில் இருந்து பெறப்படுகிற தயிர், மோர், வெண்ணெய், பனீர், சீஸ் போன்றவற்றில் தயிரும் மோரும் சிறந்தவை. பாலின் புளித்த வடிவமான தயிரில் உள்ள பாக்டீரியாக்களும் லாக்டிக் அமிலமும் செரிமானத்துக்குப் பெரிதும் உதவக் கூடியவை.

பல வீடுகளில் உபயோகிக்கிற நீல நிற ஆவின் பால் பாக்கெட்டில் இருப்பது வெறும் 3.5 சதவிகிதக் கொழுப்பு. இப்போது 2 சதவிகிதம் மட்டுமே கொழுப்பு கொண்ட பிங்க் நிற ஆவின் பால் கூடக் கிடைக்கிறது. டயட் செய்கிறவர்களுக்கு அது பெஸ்ட். ஆரஞ்சு, பச்சை நிற பாக்கெட்டெல்லாம் அதிகக் கொழுப்பு கொண்டவை என்பதால், அரிதாக பால் குடிப்பவர்களுக்கும், சராசரியை விட எடை குறைவாக உள்ளவர்களுக்கும் மட்டும் ஓ.கே

கொழுப்பு நீக்கப்பட்ட பாலாகவே இருந்தாலும், அதைக் காய்ச்சி, முதலில் அறை வெப்பநிலைக்கு ஆற வைக்க வேண்டும். மேலே படிகிற ஆடையை நீக்கி விட்டுத்தான் உபயோகிக்க வேண்டும். அந்த பால் ஏட்டைத் தனியே சேகரித்து, வாரம் ஒரு முறை வெண்ணெயாக்கி, குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here