சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் ஒரு நாள் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் 3 சதங்கள் உள்பட 558 ரன்கள் குவித்து புதிய வரலாறு படைத்த கோலி, இந்த அட்டகாசமான ஆட்டத்தின் மூலம் 33 புள்ளிகளை கூடுதலாக சேகரித்து 909 புள்ளிகளை எட்டியுள்ளார். 900 புள்ளிகளை கடந்த முதல் இந்திய பேட்ஸ்மேன் கோலி தான். இதற்கு முன்பு ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் 887 புள்ளிகள் எடுத்ததே இந்திய வீரரின் அதிகபட்ச புள்ளி எண்ணிக்கையாக இருந்தது.

விராட் கோலி டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் தற்போது 912 புள்ளிகளுடன் 2-வது இடம் வகிக்கிறார். இதன் மூலம் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டி தரவரிசை இரண்டிலும் 900 புள்ளிகளை தாண்டியவர்களின் பட்டியலில் 5-வது வீரராக கோலி இணைந்தார். அதே சமயம் ஏககாலத்தில் இந்த மைல்கல்லை எட்டிய 2-வது வீரர் என்ற சிறப்பையும் கோலி பெற்று இருக்கிறார். இதற்கு முன்பு தென்ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் ஒரே நேரத்தில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டி தரவரிசையில் 900 புள்ளிகளை கடந்திருந்தார்.

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, ஆப்கானிஸ்தான் இளம் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் ஆகிய இருவரும் ஒரு சேர முதலிட அரியணையில் ஏறியுள்ளனர். பும்ரா தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் 8 விக்கெட்டுகள் கைப்பற்றியதுடன், ஓவருக்கு சராசரியாக 3.97 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து சிக்கனத்தையும் காட்டினார். அதனால் அவருக்கு 2 இடங்கள் ஏற்றம் கிடைத்தது.

இதே போல் ரஷித்கான், சார்ஜாவில் நடந்த 5 போட்டிகள் கொண்ட ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் தொடரில் 16 விக்கெட்டுகளை சாய்த்து தங்கள் அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தார். இதன் பலனாக 8 வரிசைகள் கிடுகிடுவென உயர்ந்து, ‘நம்பர் ஒன்’ ஆகி இருக்கிறார்.

ஆண்கள் ஐ.சி.சி. தரவரிசை வரலாற்றில் ‘நம்பர் ஒன்’ இடத்தை அலங்கரித்த இளம் வீரர் என்ற அரிய மகிமையும் ரஷித்கானுக்கு கிடைத்துள்ளது. அவரது வயது 19 ஆண்டு 153 நாட்கள். இதுவரை முதலிடத்தில் இருந்த தென்ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர், இந்திய தொடரில் 4 ஆட்டத்தில் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்து சொதப்பியதால் 6-வது இடத்துக்கு பின்தங்கினார்.

ஆல்-ரவுண்டர்களின் தரவரிசையில் முதல் 3 இடங்களில் முறையே ஷகிப் அல்-ஹசன் (வங்காளதேசம்), முகமது ஹபீஸ் (பாகிஸ்தான்), முகமது நபி (ஆப்கானிஸ்தான்) தொடருகிறார்கள். ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித்கான் 11 இடங்கள் ஏற்றம் கண்டு, ஆல்-ரவுண்டர்களின் வரிசையில் 4-வது இடத்துக்கு வந்துள்ளார்.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை 5-1 என்ற கணக்கில் வென்றதன் மூலம் இந்திய அணிக்கு 4 புள்ளிகள் கூடுதலாக கிடைத்தன. இதையடுத்து ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசையில் இந்தியா 123 புள்ளிகளுடன் முதலிடத்தை பெற்றுள்ளது. 4 புள்ளிகளை பறிகொடுத்த தென்ஆப்பிரிக்கா 117 புள்ளிகளுடன் 2-வது இடம் வகிக்கிறது.

இதே போல் ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் வசப்படுத்திய ஆப்கானிஸ்தான் 4 புள்ளிகளை கூடுதலாக சேகரித்து 55 புள்ளிகளுடன் ஒரு இடம் முன்னேறி 10-வது இடத்தை பெற்று இருக்கிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here