கே. ர. ஸ்ரீதர் புளூம் எனர்ஜி என்ற ஆற்றல் நிறுவனத்தை தொடங்கியவர். இந்தியாவின் தமிழ் நாட்டில் பிறந்த இவர் திருச்சி தேசிய தொழிநுட்ப கழகத்தில் இயந்திரப் பொறியியல் பயின்றார்.பின்னர் 1980-ல் அமெரிக்காவில் உள்ள இல்லினாய் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் தொழில்நுட்பம் பயின்று முதுகலைப்பட்டமும், அதே பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றார். இவர் தற்போது அமெரிக்காவின் கலிபோரினியாவில் வசித்து வருகிறார்.

இவரை நாசா அமைப்பு வேலைக்கு எடுத்துக் கொண்டு அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள வின்வெளி தொழில்நுட்ப ஆய்வகத்தின் (ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரி) இயக்குநராக அவரை நியமித்தது.செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழக்கூடிய தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது தொடர்பான ஆய்வில், குறிப்பாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார். ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆய்வை நிறுத்தியது.

ஸ்ரீதர் தனது ஆய்வுகளை அப்படியே பின்னோக்கி செய்து பார்த்தார் அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார்.இவ்வாய்வின் மூலம் மின்சாரம் தயாராகி வெளியே வந்தது. இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கினார்.

2001-ல் தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் விஞ்ஞானிகளின் முன்னிலையில் செய்து காட்டினார்.ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் தேவைப்பட்டது.

அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்களுக்கு ஜான் டூயர் ஆரம்பத்தில் முதலீடு செய்துள்ளார். கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர்.

இது மிகப் பெரும் தொகையென்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான். காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும்.அது நீர்மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி. எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் கேடு வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று அவர் நினைத்தார்.

உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள். ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை.அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதனால் ஒரு ‘ப்ளூம் பாக்ஸ்’ இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே கருவி இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும்.

இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த ‘ப்ளூம் பாக்ஸ்’ இருக்கும் எனவும் சாதாரண மக்கள் பயன்படுத்தும் அளவுக்கு இதன் விலை இருக்கும் என்றும் கணக்கிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here