சவரத் தொழிலாளி ராம், அவரது மனைவி பூர்ணா, இரண்டு குழந்தைகளுக்கு தாய். அத்துடன்  மூன்றாவது குழந்தையைச் சுமக்கும் நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு காது மந்தம்! காதலியை மணக்கப்போகும் தனது தம்பியின் திருமணத்தை முன்னின்று நடத்தி வைக்கவேண்டுமென்கிற கோரிக்கையோடு குழந்தைகளோடு பார்பர் ஷாப்புக்கு வருகிறார் பூர்ணா. மனைவியின் கெடுபிடியால் வேலையை பாதியிலேயே அம்போவென விட்டு விட்டு, குடும்பத்கோடு பைக்கில் கிளம்புகிறார் ராம்.
அதே சமயத்தில், ஜெயிலில் இருந்து பரோலில் வந்த ரௌடி மிஷ்கின், தனது சகாக்களோடு காரில் வருகிறார். ராம்- மிஷ்கின் இருவருக்கும் சாலையில் வைத்து மோதல் ஏற்படுகிறது. ஆவேசமாகப் பேசுகிறார் ராம். அப்போது, பின்னால் வரும் கார் ஒன்று மிஷ்கின் கார் மீது மோதுகிறது. இந்நிலையில், மிஷ்கின் வாயிலிருந்து ரத்தம் வர, அவரின் சகாக்கள், கையை ஓங்கிய ராம் தான், மிஷ்கினை அடித்துவிட்டதாக கூறுகின்றனர். கடுப்பாகும் மிஷ்கின், ராமை தேடிக் கண்டுபிடித்து அவரின் கையை வெட்ட வேண்டும் என துரத்துகிறார்.

திருமணத்திற்கு செல்லும் அவசரத்தில் இருக்கும் குடும்பம் நடுத்தெருவில் நிற்க, மிஷ்கினுக்கு பயந்து ஓடி ஒளிகிறார் ராம்.கடைசியில் ரௌடி மிஷ்கின், சவரத் தொழிலாளி ராம் கையை வெட்டினாரா? இல்லையா? என்பது கிளைமாக்ஸ்.சவரத் தொழிலாளிக்கும், அவரின் கையை வெட்டத் துடிக்கும் ரௌடிக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை காமெடியாக சொல்கிறது படம்.

மிக மிக சீரியஸ் டைப்பான் படங்களைத் தரும் இயக்குநர்கள் ராம் – மிஷ்கின் இருவரையும் வைத்துக் கொண்டு ஒரு ‘பிளாக் காமெடி’ டைப் படத்தை மிகவும் நேர்த்தியாகக் கொடுத்திருக்கும் அறிமுக இயக்குநர் ஜி.ஆர்.ஆதித்யாவுக்கு கொடுக்கலாம் ஒரு பூங்கொத்து!

மனதை கலவரப்படுத்தும் கிளாமர் சீன்கள், நெருக்கமான காதல் காட்சிகள், அபத்தமான டூயட் பாடல்கள், ரத்தக் களறியான  சண்டைக் காட்சிகள், புகையும் நெருப்பில், மதுபான கூடத்தில் மங்கைகளுக்கு நடுவே போடும் குத்தாட்டம் … இப்படி மாமூலான ஒரு சினிமாவுக்கு அவசியமான எந்த மசாலாத்தனமும் இல்லாமல், மூன்றே கதாப்பத்திரங்களை வைத்துக் கொண்டு எங்கேயும் சலிப்பில்லாமல் தந்திருக்கிறார் இயக்குநர்.

அழுக்கான ஆடை, சோடா புட்டி கண்ணாடியோடு சவரக் கத்தியை நம்பி வாழ்க்கையை ஓட்டும் நிஜமான சவரத் தொழிலாளியாகவே மாறியிருக்கிறார் கதையின் நாயகன் ராம். , இரண்டு குழந்தைகளுக்கு தாயாக, மேலும் ஒரு குழந்தையைச் சுமக்கும் நிறைமாத கர்ப்பிணியாக, காது மந்தமான நடுத்தர வயதுப் பெண்ணாக, ராமின் மனைவியாக வரும் பூர்ணா, பரிபூரணமான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

கோலிக்குண்டு கணங்களை உருட்டி மிரட்டுயே வில்லத்தனத்தை வெகு நேர்த்தியாக காட்டுகிறார் மிஷ்கின். பொதுவாக ரௌடியின் கையில் இருக்கும் கத்தி, ரத்தம் பார்க்காமல் ஓயாது! ஆனால், இந்த ரௌடியின் கத்தி, ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் தொப்புள்கொடியை வெட்டவே பயன்படுகிறது.

அரோல் கொரேலியின் பின்னணி இசை படத்தின் காட்சிகளோடு சேர்ந்து பயணிக்கிறது. காட்சிக்கு பங்கம் வராமல் இரண்டு பாடல்களையும் சரியான இடத்தில் வைத்திருப்பது சிறப்பு. காட்சிகளை சிறப்பாகப் படம் பிடித்திருக்கிறார்  ஒளிப்பதிவாளர் வெங்கட்ராமன்.

ரேட்டிங் : 3/5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here